‘ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க’ - மதுரை காவல் ஆணையரிடம் மனு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் பொதுமக்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய ஹெச்.ராஜா, இந்து முன்னணியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி மதுரை காவல் ஆணையரிடம் பல்வேறு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம், விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மதுரை காவல் ஆணையர் லோகநாதனிடம் இன்று கொடுத்த புகார் மனுவின் விவரம்: 'கடந்த டிசம்பரில் ராஜபாளையத்தில் இருந்து இஸ்லாமிய குடும்பம் ஒன்று திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி வெட்டி கந்தூரி நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றனர். அவர்களை காவல் ஆய்வாளர் மதுரை வீரன் தடுத்தார். இதைத்தொடர்ந்து ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மலையில் தர்கா இருக்கும் பகுதி 50 சென்ட் இடம் வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ளதால் வக்பு வரிய தலைவர் என்ற முறையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் காவல் துறை அனுமதியுடன் தயாரித்த உணவை தர்காவுக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளார். ஆனால் இந்து முன்னணி, பாஜகவினர் பிரியாணி சாப்பிட்டதாக பொய் பிரச்சாரத்தை கிளப்பி செயல்பட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை தேவஸ்தானம் அமைப்புக்கு சொந்தமானது என, நீதிமன்றத்தில் 1919ல் வழக்கு தொடர்ந்தபோது, சிக்கந்தர் மலை தவிர, இதர பகுதிகள் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என, தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், 1998-ல் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், 'இஸ்லாமியர்கள் உரிமை பாதிக்கும் வகையில் எவ்வித இந்து அமைப்புகளையும் அனுமதிக்கக் கூடாது,' என்ற தீர்ப்பும் வந்துள்ளது. இவ்வழக்கில் சிக்கந்தர் மலையில் தர்கா இருப்பதும், தர்காவிற்கு சொந்தமான இடங்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என, இஸ்லாமியர்கள் கூறுவதாக இந்து முன்னணியினர் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே கடந்த 4-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதி கிடைக்காத சூழலில் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்று பேசிய பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா , 'அயோத்தி பாபர் மசூதி போன்று திருப்பரங்குன்றம் மாறும்,' என, பிரச்சாரம் செய்தார். நீதிமன்ற உத்தரவை மீறி இந்து முன்னணி, பாஜகவினர் இஸ்லாமியர்கருக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். பொதுமக்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய ஹெச்.ராஜா, இந்து முன்னணியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் மதுரைவீரன், இந்து அறநிலைய இணை ஆணையர், வட்டாட்சியர், ஆர்டிஓ போன்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE