தூத்துக்குடி பகுதியில் கொள்ளையடித்துவிட்டு, நகை, பணத்துடன் தப்ப முயன்ற ஆயுதப்படை போலீஸ்காரர் விருதுநகரில் சிக்கினார். அவரிடமிருந்து 38 பவுன் நகை, பணம் மற்றும் நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் - சாத்தூர் இடையே பட்டம்புதூர் விலக்கு அருகேயுள்ள ஆசிரியர் காலனி சாலையில் இருசக்கர வாகனம் நேற்று மாலை நீண்ட நேரமாக நின்றிருந்தது. சந்தேகமடைந்த அப்பகுதியினர் சென்று பார்த்தபோது, வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், நகைகள், ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீஸார், வாகனத்தில் இருந்த நாட்டு கைத்துப்பாக்கி, 6 தோட்டாக்கள், 38 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கைப்பற்றினர்.
அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், போலீஸார் மற்றும் பொதுமக்களின் கூட்டத்தைக் கண்டதும், அங்கிருந்து வேகமாகச் சென்று, சற்று தூரத்தில் வாகனத்தை விட்டுவிட்டு காட்டுப் பகுதிக்குள் தப்பினர். இதற்கிடையே தப்பியோடிய இருவரில் நேற்று மாலை ஒருவரை போலீஸார் பிடித்தனர். அவர் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ்காரர் என்பதும், தூத்துக்குடி பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளையடித்துவிட்டு விருதுநகர் வந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட ஆயுதப்படை போலீஸ்காரரிடம் வச்சக்காரப்பட்டி போலீஸார் தனி இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்