பல பெண்களுடன் உல்லாசம்: வீடியோ எடுத்து மிரட்டிய செங்கல்பட்டு பாஜக இளைஞரணி செயலாளர் கைது

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: செம்பாக்கம், திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் (24). இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். மேலும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடந்த 2018ம் ஆண்டு முதல் பழகி பின்னர் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை முறைப்படி திருமணம் செய்து கொள்வதாக கூறி லியாஸ் தமிழரசன் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணை அவரது பெற்றோர்களுக்கு அறிமுகமும் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் லியாஸ் தமிழரசன் அந்தப் பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

மேலும் அதனை அவருக்கு தெரியாமல் வீடியோவாக பதிவும் செய்தியை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் லியாஸ் தமிழரசன் பல இடங்களுக்கு அந்தப் பெண்ணை அழைத்து சென்று பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணிடம் இருந்து சிறுக, சிறுக பணமாக சுமார் 20 லட்சமும், நகையாக சுமார் 20 சவரனும் பெற்றுள்ளார்.

பின்னர் லியாஸ் தமிழரசனிடம் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது லியாஸ் தமிழரசன் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியும் உள்ளார்.

பின்னர் லியாஸ் தமிழரசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அந்தப் பெண் சோதனை செய்து பார்த்தபோது அதில் அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், பல பெண்களை அதே போல காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பணம் மற்றும் நகையை பெற்றதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண் லியாஸ் தமிழரசன் மீது சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பல பெண்களை ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனில் பல பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீஸார் நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.

இதே போல மற்றொரு பெண்ணும் அவர் மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவர் மீது புகார் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் லியாஸ் தமிழரசனுக்கு சாதகமாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராக்குமதி செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுத்தியதுடன் வழக்கு சம்பந்தமான எந்த தகவல்களையும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், செய்தி வெளியாகமால் இருக்க குற்றவாளிகளிடமும் பேரம் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE