சின்னாளபட்டி அருகே கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

By KU BUREAU

திண்டுக்கல்: சின்னாளபட்டி அருகே மேலக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜ் (53), மகேஸ்வரி (39) தம்பதி. இவர்களுக்கு ஜெயசூர்யா (20) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், இவர்களது வீட்டுக்கு ரியல் எஸ்டேட் தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த பரமசிவம் (58) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதில் மகேஸ்வரிக்கும், பரமசிவத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மகேஸ்வரியை அழைத்துச் சென்ற பரமசிவம், தேனி பழைய அரசு மருத்துவமனை சாலை மிராண்டா லைன் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த நாகராஜ், அவரது மகன் ஜெயசூர்யா மற்றும் உறவினர் மணிகண்டன் ஆகியோர் பரமசிவத்தின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, வீட்டை விட்டு வெளியே வந்த பரமசிவத்தையும், மகேஸ்வரியையும் கத்தியால் குத்தினர். இதில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிகிச்சைக்குப் பின் மகேஸ்வரி குணமடைந்தார். இச்சம்பவம் 2020 நவம்பர் 11-ம் தேதி நடந்தது.

இதுகுறித்த வழக்கு தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், நீதிபதி அனுராதா குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE