புழல் சிறையில் சோப்புக்குள் மறைத்து வைத்து கைதிகளுக்கு கொடுக்க முயன்ற 31 கிராம் கஞ்சா பறிமுதல்!

By இரா.நாகராஜன்

செங்குன்றம்: புழல் மத்திய சிறையில் சோப்புக்குள் மறைத்து வைத்து கைதிகளுக்கு கொடுக்க முயன்ற 31 கிராம் கஞ்சாவை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கைதிகள், பார்வையாளர்கள் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணை பிரிவு, தண்டனை பிரிவு மற்றும் மகளிர் பிரிவு ஆகியவற்றில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த கைதிகளை பார்ப்பதற்காக நாள் தோறும் கைதிகளின் உறவினர்கள், நண்பர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறை வளாகத்துக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் சிறை கைதிகளுக்கு வழங்கும் உணவு பொருட்களை சிறை காவலர்கள் சோதனை செய்து, சம்பந்தப்பட்ட கைதிகளிடம் வழங்குவது வழக்கம்.

அந்த வகையில், புழல் மத்திய சிறை பார்வையாளர் பகுதிக்கு நேற்று இரு வேறு வழக்குகள் தொடர்பாக கைதாகி, சிறையின் விசாரணை பிரிவில் உள்ள கோபிநாத், ஆனந்தராஜ் ஆகிய இருவரை சந்திக்க அவர்களது உறவினர்கள் வந்தார்கள். அவ்வாறு வந்தவர்கள் கைதிகள் இருவருக்கான சோப்பு, உணவுப் பொருட்கள், உடைகளை சிறை காவலர்களிடம் அளித்துவிட்டு சென்றனர்.

அவற்றை சிறை காவலர்கள் சோதனை செய்தனர். அச்சோதனையில், குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு ஆகியவற்றில் 31 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகார்களின் பேரில், சோப்புக்குள் மறைத்து வைத்து கைதிகளுக்கு கஞ்சா கொடுக்க முயன்றது தொடர்பாக, கைதிகள் கோபிநாத், ஆனந்தராஜ், பார்வையாளர்கள் நந்தகுமார், ரேவதி, அன்பழகன், சந்தியா ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE