திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தேர்தல் முன் விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர், 3-க்கும் மேற்பட்டோரால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர்- இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் ஜெகதீசன். அதிகத்தூர் ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினர். இவருக்கும், அதிகத்தூர் ஊராட்சியின் முன்னாள் தலைவரான சரவணன் மகன் சேகுவாராவுக்கும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஜெகதீசன் தன் வீட்டருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சேகுவாரா உள்ளிட்ட3-க்கும் மேற்பட்டோர், அரிவாளால் ஜெகதீசனின் தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஜெகதீசன் பொதுமக்களால் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கடம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜெகதீசனை தாக்கி விட்டு தப்பியோடிய சேகுவாரா உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.