திருச்சியில் அடுத்த அதிர்ச்சி: தண்ணீர் தொட்டியில் மனித மலம் வீச்சு

By KU BUREAU

திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது பாலித்தின் பையில் சுற்றப்பட்ட மனிதக் கழிவு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள், தண்ணீரில் கிடந்த மனிதக் கழிவை அகற்றிவிட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப் படுத்தினர். அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர். தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை வீசிச் சென்றவர்கள் யார் ? என்பது குறித்து, திருச்சி மாநகர கோட்டை போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இந்த தொட்டியில் உள்ள தண்ணீர் குடிநீருக்காக பயன்படுத்தப்படுவதில்லை என சொல்லப்படுகிறது. கஞ்சா போதையில் திரியும் சில நபர்களே, தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE