மதுரை: மதுரை சோழவந்தானில் ‘கிரில் சிக்கன்’ சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த உணவை தயார் செய்து வழங்கிய ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அபராதம் விதித்து ‘நோட்டீஸ்’ வழங்கியுள்ளது.
மதுரை சோழவந்தானில் சின்னக்கடை வீதியில் ஒரு ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர். உணவு நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சென்று ஆய்வு செய்தனர். உடல் நலன் பாதிக்கப்பட்ட கிரில் சிக்கனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், சுகாதார குறைபாடுள்ள உணவை தயார் செய்து வழங்கிய ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை ரூ.2 ஆயிரமும், நெகிழிகள் பைகள் பயன்பாட்டிற்காக ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்து ‘நோட்டீஸ்’ வழங்கியுள்ளது.