ராயப்பேட்டையில் மெத்தம்பெட்டமைன் விற்பனை: தலைமறைவாக இருந்த இருவர் கைது

By KU BUREAU

சென்னை: ராயப்பேட்டை பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வழக்கில் தலைமறைவாகயிருந்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10.04 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ”ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் கடந்த ஜனவரி 3ம் தேதி அன்று பீட்டர்ஸ் ரோடு, நியூ கல்லூரி அருகே கண்காணித்து, அங்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த விருகம்பாக்கத்தை சேர்ந்த யாசர் அராபத் (27) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 2.25 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மேற்படி யாசர் அரபாத் அளித்த வாக்குமூலத்தின் படி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த திருவாடனை நைனார் முகமது மகன் முகமது ஆரிஸ் மற்றும் நாகூர் அப்துல் காதர் மகன் ரஷித் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10.04 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (04.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE