ஓடும் ரயிலில் மாலுமியிடம் செல்போன் பறிப்பு: சென்னையில் 2 பேர் கைது

By மு.வேல்சங்கர்

சென்னை: வியாசர்பாடி ஜீவா - பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு இடையே மெதுவாக சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில், கடற்படை மாலுமியிடம் விலை உயர்ந்த செல்போனை பறித்த இளஞ்சிறார் உள்பட இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர் பட்டுலா தினேஷ் (22). இந்திய கப்பல் படை மாலுமியான இவர் திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஒரு மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 2-ம் தேதி வந்தார். அங்கிருந்து அதேநாள் பிற்பகல் 3.20 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு விரைவு ரயிலில் புறப்பட்டார். அப்போது, படிக்கட்டு அருகே நின்றுகொண்டிந்தார்.

இந்த ரயில் வியாசர்பாடி ஜீவா - பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு இடையே மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, பட்டுலா தினேசின் விலை உயர்ந்த செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துகொண்டு தப்பி ஓடினர். அவருடன் மற்றொரு நபரும் இருந்தார்.

இது குறித்து பெரம்பூர் ரயில்வே போலீசில் பட்டுலா தினேஷ் புகார் கொடுத்தார். அப்போது, குற்றவாளி தொடர்பாக அடையாளங்களை கொடுத்திருந்தார். இதன்பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக இருவர் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பேசினர். இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தபோது, அவர்கள் சென்னை கண்ணிகாபுரத்தைச் சேர்ந்த பிரவீன் (20) மற்றும் 17 வயது இளஞ்சிறார் என்பதும், பட்டுலாதினேஷின் செல்போனை பறித்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்து, 17 வயது இளஞ்சிறாரை கெல்லீசில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினர். பிரவீனை புழல் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE