சென்னை: போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது

By KU BUREAU

சென்னை: கொக்கைன் போதைப்பொருள் விற்பனை செய்த சூளைமேடு, ஜெ.ஜெ.நகரில் 6 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 57 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனர்.

சென்னை சூளைமேட்டில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த மாதம் 25-ம் தேதி சூளைமேடு அண்ணா நெடும்பாதை மற்றும் ராகவன் தெரு சந்திப்பு அருகே தனிப்படை போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் கொக்கைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த பயாஸ் அகமது (31), கோயம்பேட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, 27ம் தேதி சாலி கிராமத்தைச் சேர்ந்த வாசில் அகமது (26), அண்ணா நகர் கிழக்கு அனிருத் சவுத்ரி (35), அர்ஜுன் (28), ஜூலியன் டிசான் (33), புழுதிவாக்கம் நிதிஷ்குமார் (22), செங்கல்பட்டைச் சேர்ந்த ரோகன் (29), நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அருண்ராஜ் (29) ஆகிய 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3.93 கிராம் கொக்கைன், 854 கிராம் கஞ்சா, 2 எடை போடும் இயந்திரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பெரம்பூரைச் சேர்ந்த மயூர் புராட் (35), சூளைமேட்டைச் சேர்ந்த நளிம்பாடி (23), ராயன் டேனி (19), அண்ணா நகரைச் சேர்ந்த மிக்கேல் (20), ராமாபுரத்தைச் சேர்ந்த அயன்கான் (21) ஆகிய 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்து 55 கிராம் கொக்கைன், 850 கிராம் கஞ்சா, 3 கிராம் ஓஜி கஞ்சா, 3 எடை போடும் இயந்திரங்கள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், ஜெ.ஜெ.நகர் வீரமாமுனிவர் சாலை பார்க் அருகே கொக்கைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஅப்பு (29) என்பவரைக் கைது செய்த தனிப்படை போலீஸார் அவரிடம் இருந்து 2.23 கிராம் கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE