தேனி: ஆண்டிபட்டி அருகே திருமணமான அன்றே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(56), அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சவுமியா(24). பெரியகுளம் கல்லூரியில் பிஎட்.முடித்துள்ளார். சவுமியாவுக்கு கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பாலாஜியை(27) நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருப்பினும் சவுமியா திருமணத்தில் ஈடுபாடு இன்றியே இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜன.31) கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இவர்களுக்கு திருமணமானது.
பால்,பழம் கொடுப்பதற்காக மணமக்களை பெண் வீட்டார் கதிர்நரசிங்கபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்கு வந்த சவுமியா பாத்ரூம் செல்ல வேண்டும் என்று படுக்கை அறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டார். பின்பு அங்கிருந்த மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று உடலை கீழே இறக்கினர்.
இது தொடர்பாக விசாரித்து வரும் போலீஸார் கூறுகையில், இறந்த பெண் திருமணத்தில் விருப்பம் இன்றியே இருந்துள்ளார். கன்னியாஸ்திரியாக போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.
» இது மத்திய பட்ஜெட் இல்லை; பிஹார் மாநிலத்துக்கான பட்ஜெட் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
» பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம்: அன்புமணி ஆதங்கம்