13 வயது சிறுமிக்கு போலீஸ் பூத்தில் பாலியல் தொல்லை; காவலர் கைது - சென்னையில் மீண்டும் அதிர்ச்சி!

By KU BUREAU

சென்னை: பட்டினப்பாக்கம் அருகே போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்

கடந்த 25ம் தேதி சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, அவரது 16 வயது ஆண் நண்பர் தனது வீட்டில் வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அச்சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி, பட்டினப்பாக்கம் பகுதிக்கு சாலையில் நடந்து சென்றுள்ளார். அங்கு நள்ளிரவு நேரத்தில், காவல் வாகனம் ஒன்று இருந்தது. அங்கிருந்த போலீஸாரிடம் வீட்டிற்கு செல்ல உதவி கேட்டுள்ளார்.

அப்போது, பணியில் இருந்த காவல் வாகன ஓட்டுநரான காவலர் ராமன், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவரை பட்டினப்பாக்கத்தில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல காவல் வாகனத்தில் அழைத்து செல்லும்போதும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், காவலர் ராமனுக்கு எதிராக கூறப்பட்ட குற்றசாட்டுகளை உறுதி செய்தனர். இதனால் அவரை போக்சோவில் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை தற்போது மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது ஆண் நண்பர் மற்றும் அதற்கு உடந்தையாக ஆண் நண்பரின் தாய் என 2 பேரும் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE