சென்னை: மீன்பிடி துறைமுகம் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை, காசிமேடு, சிங்காரவேலர் நகர் 12வது தெருவில் வசித்து வரும் விஜயன் (69) என்பவர் காசிமேடு கடலோரத்தில் உள்ள படகில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். விஜயன் நேற்று (30.01.2025) காலை சுமார் 11 மணியளவில் காசிமேட்டில் உள்ள நாகூரான் தோட்டம் மீன் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, 4 நபர்கள் விஜயனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தகாத வார்த்தையில் பேசி மேற்படி விஜயன் பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.500-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து விஜயன் என்-4 மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட தண்டையார்பேட்டை சேர்ந்த சுபாஷ் (20), புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த நிர்மல் (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில் சுபாஷ் மீது ஏற்கனவே ஒரு அடிதடி வழக்கு உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (30.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்களை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்” என்று காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.