சென்னை: ஈசிஆர் சாலையில் திமுக கொடி பொருத்திய காருடன், பெண்கள் பயணித்த காரை இடைமறித்து அச்சுறுத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு இளம் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி பொருத்திய காரில் நான்கு இளைஞர்கள் துரத்திச் சென்ற வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஈசிஆர் முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக அந்த 4 இளைஞர்களும் தாங்கள் சென்ற காரை நிறுத்தியுள்ளனர். அப்போது புகார் அளித்த பெண்கள் தங்களின் காரை நிறுத்திவிட்டு கழிமுகப் பகுதியில் வேடிக்கை பார்த்து உள்ளனர்.
தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய பெண்கள் தங்களின் காரை ரிவர்ஸ் எடுத்துள்ளனர். அப்போது பின்னால் நின்றிருந்த இளைஞர்களின் கார் மீது பெண்களின் கார் உரசி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் 2 கார்களில், பெண்கள் வந்த காரை விரட்டி சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் பெண்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
» கோவையில் பாஜக மாவட்ட தலைவர் கைது - காரணம் என்ன?
» படப்பையில் 24 வயது பெண்ணுக்கு ‘லவ் டார்ச்சர்’ - அதிமுக நிர்வாகி கைது
இந்நிலையில், நேற்று முன் தினம் இந்த வீடியோ வெளியாகி வைரலானதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தி சென்று தாக்க முற்பட்டதாக எழுந்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வீடியோக்கள் கார் எண்கள் கண்டறியப்பட்டு இளைஞர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்புக்கப்பட்டது.
இந்நிலையில், ஈசிஆர் சாலையில் காரை துரத்தி இளம்பெண்களை அச்சுறுத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும், இளம் பெண்களை அச்சுறுத்த பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனாலும், கைது செய்யப்பட்ட 6 பேரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.