படப்பையில் 24 வயது பெண்ணுக்கு ‘லவ் டார்ச்சர்’ - அதிமுக நிர்வாகி கைது

By பெ.ஜேம்ஸ் குமார்

படப்பை: காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்படப்பை பகுதியில் வசித்து வருபவர் பொன்னம்பலம் (60). இவர் அதிமுக கட்சியில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இவருடைய வீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 24 வயது பெண் தனது தோழிகளுடன் வாடகைக்கு தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், பொன்னம்பலம் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி அடிக்கடி டார்ச்சர் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் வீட்டை காலி செய்து படப்பையில் உள்ள வேறு ஒரு வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார். அதன் பின்பும் அந்த பெண் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றும் பெண்ணை பின் தொடர்ந்து சென்றும் செல்போனில் ஆபாசமாக பேசியும் ‘டார்ச்சர்’ செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் வசிக்கும் வீட்டில் சென்று தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை துடைப்பத்தால் அடித்து விரட்டியுள்ளனர்.

இதுகுறித்த, வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மணிமங்கலம் போலீஸார் பொன்னம்பலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். படப்பை பகுதியில் அதிமுக நிர்வாகி தன்னுடைய வீட்டில் குடியிருந்த பெண்னுக்கு ‘லவ் டார்ச்சர்’ அளித்ததும் பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் அதிமுக நிர்வாகி துடைப்பத்தால் அடித்து விரட்டியதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக குற்றச்சாட்டு: பொன்னம்பலம் அந்த பெண்ணுக்கு லவ் டார்ச்சர் மட்டுமே கொடுத்துள்ளார். பாலியல் தொந்தரவு கொடுக்கவில்லை. கடந்த 20 நாளுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து பெண் புகார் அளிக்க மறுத்ததால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்டவரை எச்சரித்துள்ளனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம், சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் திமுக கொடியுடன் காரில் வந்த சிலர் பெண்களை மிரட்டியது போன்ற விவரங்களை திசை திருப்புவதற்காக காவல் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை அதிமுகவினர் முன்வைக்கின்றன.

பெண் புகார் கொடுக்க மறுத்த நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், காவல் துறையே வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர் என அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிமுகவில் இருந்து நீக்கம்: இந்நிலையில், பொன்னம்பலத்தை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE