திருவொற்றியூரில் நடந்து சென்ற நபரை கத்தியால் தாக்கி கொலை முயற்சி: 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது!

By KU BUREAU

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் சாலையில் சென்ற நபரிடம் வீண் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இளஞ்சிறார் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, திருவொற்றியூர், ஒண்டிக்குப்பம் 2வது தெருவில் வசித்து வரும் முகமது அலி (53) என்பவர் லோடிங் வேலை செய்து வருகிறார். முகமது அலி கடந்த ஜனவரி 27ம் தேதி அன்று இரவு டிபன் வாங்குவதற்காக வீட்டினருகே பூங்காவனம் 2வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த தெரிந்த நபர்களான 2 வாலிபர்கள் முகமது அலியிடம் வீண் தகராறு செய்து கைகளால் தாக்கியும் அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமது அலியை தாக்கியும் பொதுமக்கள் வருவதை கண்டு இருவரும் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.

ரத்தக் காயமடைந்த முகமது அலி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து முகமது அலி கொடுத்த புகார் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்தில், கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருவொற்றியூர், ராஜா கடை, திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஆகாஷ் (எ) பிள்ளையார் (19) என்பவரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 17 வயது இளஞ்சிறாரிடம் விசாரணை செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் ஆகாஷ் மீது ஏற்கனவே, H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் 3 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஆகாஷ் விசாரணைக்குப் பின்னர் நேற்று (29.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இளஞ்சிறார் சிறுவர் நீதிக் குழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டு, உத்தரவுப் படி அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்” என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE