வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன்கள் திருட்டு: கொளத்தூரில் அதிர்ச்சி!

By KU BUREAU

சென்னை: கொளத்தூர் பகுதியில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "சென்னை, பட்டாபிராம், செந்தமிழ் நகர், ஜெகஜீவன் தெருவில் வசித்து வரும் மாரிச்சாமி மனைவி ராஜேஸ்வரி (55) என்பவர் கடந்த ஜனவரி 25ம் தேதி அன்று அவரது சம்மந்தி இறந்துவிட்டதால், கொளத்தூர், முருகன் நகர் பகுதியில் உள்ள சம்மந்தியின் வீட்டிற்கு சென்று இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாலை ஆண்கள் அனைவரும் இறுதி ஊர்வலத்தில் சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த பெண்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, 1 நபர் மேற்படி வீட்டிற்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி ராஜேஸ்வரி மற்றும் வீட்டிலிருந்த பெண்களை மிரட்டி பணம் ஒரு லட்சம் மற்றும் 2 செல்போன்களை பறித்துச் சென்றதாக ராஜேஸ்வரி கொளத்தூர் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட கொளத்தூர் குமார் (38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 செல்போன் மற்றும் பணம் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட குமார் நேற்று (28.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE