உடல் நலம் பாதித்த கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை தண்டனை: ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் அருகே உடல் பாதித்த கணவரை கொலை செய்து விட்டு, தற்கொலை நாடகமாடிய மனைவிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஶ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் சந்தன மாரியப்பன் (46). இவரது மனைவி பாண்டிச் செல்வி (39). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். சந்தன மாரியப்பனுக்கு கண் பார்வை குறைபாடு கை, கால் செயல்படாததால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தார். பாண்டிச்செல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக பாண்டிச் செல்வி புகார் அளித்தார்.

பிரேத பரிசோதனையில் சந்தன மாரியப்பன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. விசாரணையில் சந்தன மாரியப்பன் சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்ததால் மனைவி பாண்டிச் செல்வி கணவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, தளவாய்புரம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து பாண்டிச்செல்வியை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பாண்டிச் செல்விக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE