புது வீடு கட்டியதால் கடன் தொல்லை: சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை!

By KU BUREAU

சேலம்: கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரிசிபாளையம் முத்தையாள் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவரது மனைவி ரேகா (38), இவர்களது மகள் ஜனனி (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கணவன், மனைவி இருவரும் வீட்டிலேயே வெள்ளி வேலை செய்து வந்தனர். இந்தநிலையில், சமீபத்தில் வங்கியில் கடன் வாங்கி பால்ராஜ் வீடு கட்டியுள்ளார். மேலும் வெள்ளி தொழிலும் அவர்களுக்கு சரியாக நடைபெறவில்லை.

இதன் காரணமாக பால்ராஜ் அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அவரால் கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வங்கியில் இருந்து கடனை செலுத்தும்படி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனிடையே நேற்று வங்கியில் இருந்து வீட்டுக்கு வந்தவர்கள் பணத்தை கட்டும்படி கேட்டுள்ளனர். இந்த சூழலில் இன்று காலை ஜனனி, பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் அருகே வசித்து வரும் பால்ராஜின் சகோதரர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது.

பின்னர் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகிய மூவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த உறவினர்கள் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டனர். மேலும் பால்ராஜ் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் தற்கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE