செங்குன்றம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது

By இரா.நாகராஜன்

செங்குன்றம்: செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரில் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரில் இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் நிற்பதாக இன்று காலை செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுக் கொண்டிருந்த, சென்னை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (27) என்ற இளைஞர், கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில், சிலம்பரசன், சென்னையில் விற்பனை செய்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் இருந்து 22 கிலோ கஞ்சாவை தமிழகத்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், சிலம்பரசனை கைது செய்து, அவரிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE