ஶ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயிலின் மூல விக்கிரகத்தை சேதப்படுத்தி, உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நல்லதங்காள் கோயில் உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதி மக்களின் குலதெய்வமாக உள்ள நல்லதங்காள் கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
» திருப்பூரில் பெண் உட்பட வங்கதேசத்தினர் 36 பேர் கைது
» திருக்கடையூரில் தொழிலதிபரை கடத்த திட்டமிட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது
ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் கருவறை கதவு உடைந்து கிடப்பதை பார்த்த விவசாயிகள் ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பூசாரி மற்றும் ஊர் மக்கள் கோயிலுக்குள் சென்று பார்த்த போது, அம்மன் சிலை கீழே சாய்ந்த நிலையில் தலை மற்றும் கைகள் தனியாக உடைந்து கிடந்தது. இது குறித்த புகாரில் வத்திராயிருப்பு போலீஸார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கோயிலில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கோயிலின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் பொருட்களை திருடி உள்ளனர். கருவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று நல்லதங்காள் மூல விக்கிரகத்தை இரும்பு கம்பி கொண்டு பெயர்த்து உள்ளனர். அப்போது சிலை கீழே விழுந்ததில் தலை மற்றும் கைகள் தனியாக உடைந்து இருக்கலாம், என்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்: பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயிலில் நடந்த திருட்டு சம்பவத்தில், சிலை பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளதால், சிலை கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்,'' என்றனர்.
கோயில் வரலாறு: விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த ராமலிங்க சேதுபதிக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரு குழந்தைகள். நல்லதங்குக்கு தங்காளுக்கு மானாமதுரையை காசிராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நல்லதங்காளுக்கும் 4 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்தன. வறுமை காரணமாக குழந்தைகளுடன் அர்ச்சுனாபுரத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கு வந்த நல்லதங்காள், அண்ணன் இல்லாத நிலையில் அவரது மனைவி தவறாக பேசியதால் 7 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையறிந்த அவரது அண்ணன் நல்லதம்பி மனைவியை கொலை செய்துவிட்டு அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அண்ணனையும், அவரது மனைவியையும் உயிர்ப்பித்த நல்லதங்காள், அங்கேயே நெல் வயல்களுக்கு நடுவே பத்திரகாளி ரூபத்தில் கோயில் கொண்டுள்ளார். இந்த கோயில் அவரது அண்ணன் நல்லதம்பி மற்றும் 7 குழந்தைகளும் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.