திருப்பூர்: உரிய ஆவணங்களின்றி திருப்பூர் மாநகரில் தங்கியிருந்த பெண் உட்பட 36 பேர் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள், அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதால், தினமும் வேலை தேடி திருப்பூருக்கு வடமாநிலங்களில் இருந்து ரயில்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களுடன் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களும் திருப்பூர், கோவை, கரூர் ஆகிய பகுதிகளில் தஞ்சமடைகின்றனர்.
இந்நிலையில், கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையிலான போலீஸார், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், பனியன் நிறுவனங்களில் சோதனை நடத்தினர். இதில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த வடமாநிலத்தவர் போன்றவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாத வங்கதேசத்தினர் பலர் இருப்பதை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர் மாநகரில் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 பேர், தெற்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 பேர், நல்லூர் காவல்நிலைய பகுதியில் பெண் உட்பட 10 பேர் என மொத்தம் 36 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து போலி ஆவணங்கள் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரே மாதத்தில் திருப்பூரில் 83 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
» கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்றும் தொல்லை - கர்நாடக பெண்ணுக்கு கொடுமை
» சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த பெண் கைது - ஒருவர் மீட்பு!