மேட்டூர்: மேட்டூரில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த 6 பேருக்கு இரட்டை ஆயுள், 2 வருடம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (38), ஆட்டோ டிரைவர். இவருக்கும், மேட்டூர் பிள்ளையார் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரும் இடையே சூதாட்டம் தொடர்பாக முன்பகை இருந்து வந்தது.
இந்நிலையில் ராமமூர்த்தி அவரது கூட்டாளிகளான சுரேஷ்குமார் (35), பாலாஜி (34), சிவக்குமார் (34), முருகன் (34) மற்றும் தினேஷ் (31) ஆகியோர், கடந்த 2015-ம் ஆண்டு மேட்டூரில் மதுபான கடை முன்பு வைத்து, ரஞ்சித்குமாரை கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து ரஞ்சித்குமார் சகோதரி ஜெயம் குமுதா (40), மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், 6 பேரும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர், 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, ஆயுதங்கள், வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீஸார் 6 பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மேட்டூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
» சேலத்தில் அறக்கட்டளை பெயரில் மோசடி: ரூ.12.50 கோடி, 2.5 கிலோ தங்கம் பறிமுதல்
» திருப்பூர் நிகழ்வில் தேசிய கீதத்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்ததால் சலசலப்பு
அதன்படி, ஆட்டோ டிரைவரை கொலை செய்த 6 பேருக்கும் இரட்டை ஆயுள், 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று மேட்டூர் கூடுதல் அமர்வு நீதிபதி உதய வேலவன் உத்தரவிட்டார்.