காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்திய கும்பல் - எடப்பாடி போலீஸ் விசாரணை

By த.சக்திவேல்

மேட்டூர்: எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை வீடு புகுந்து கத்தி, அரிவாளுடன் காரில் கடத்தி சென்ற கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தனிஷ்கண்டன் (25). இவர் ஓசூர் டாடா கம்பெனியில் பணிபுரிந்த போது, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சின்னம்பள்ளியை சேர்ந்த ரோஷினி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், எடப்பாடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு ஆஜராகினர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய போது, பெண்ணின் பெற்றோர்கள் வர மறுத்ததையடுத்து, இருவரும் மேஜர் என்பதால் தனிஷ்கண்டன் குடும்பத்தினருடன் இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து,

எடப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சியில், வசிக்கும் தனிஷ்கண்டன், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ரோஷினி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். காதல் திருமணம் நடந்து 6 மாதங்களுக்கு மேலாகிய நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் இன்று மதியம் தனிஷ்கண்டன் வீட்டுக்கு காரில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.

அப்போது, அடியாட்களுடன் வந்த பெற்றோர் தனிஷ்கண்டன் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து, தனிஷ்கண்டனை தள்ளி விட்டு, பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி, காரில் கடத்தி சென்றனர். பெண்ணின் அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்களையும் ஆயுதங்களை காட்டி மிரட்டியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் எடப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பெண்ணை கடத்தி சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை காரில் கடத்தி சென்ற நிலையில் அனைத்து பகுதிகளிலும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE