தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து தோணி மூலம் மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்பிலான 12 கிலோ 'ஹசீஷ்' என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக வெளிநாட்டுக்கு போதை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உளவுப் பிரிவு போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பழைய துறைமுகம் பகுதியில் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சந்தேகப்படும் படியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் பழைய துறைமுகத்துக்கு வந்தனர். உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தலா 2 கிலோ எடை கொண்ட 6 பாக்கெட்டுகள் இருந்தன. இந்த பாக்கெட்டுகளில் ஜெல் போன்ற பொருள் இருந்தது. உடனடியாக அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பகுப்பாய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்தனர்.
» பட்டியலின பெண்ணை மணந்த தம்பியை மனைவியுடன் கொன்ற வழக்கு: அண்ணன் குற்றவாளி என தீர்ப்பு
» புதுச்சேரி: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது
இந்த சோதனையில், அந்த பாக்கெட்டுகளில் இருப்பது 'ஹசீஷ்' என்று அழைக்கப்படும் கஞ்சா எண்ணெய் என்பது தெரியவந்தது. 10 கிலோ கஞ்சாவை உருக்கினால் ஒரு கிலோ ஹசீஷ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் ஹசீஷ் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட ஹசீஷ் போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த ஜேசு ராஜா (34), சுதாகர் (33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு செல்லும் தோணி மூலம் போதை பொருளை மாலத்தீவுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அதிகாரிகள், அந்த தோணியின் மாலுமியான தூத்துக்குடி ஜார்ஜ் சாலை பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி (56), கடத்தலுக்கு உதவிய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரான தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த மாரிமுத்து (30) ஆகியோரையும் கைது செய்தனர். இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.