போலீஸ் என மிரட்டி இளைஞரிடம் பணம் பறித்த கும்பல் - சென்னையில் 3 பேர் கைது

By KU BUREAU

சென்னை: பாரிமுனை அருகே போலீஸ் எனக்கூறி தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7,500 ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ”கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்காவைச் சேர்ந்த சேகரின் மகன் சேது (25) என்பவர் நேற்று (22.01.2025) காலை, பாரிமுனை, வடக்கு கடற்கரை ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனம் அருகே நின்றிருந்த 4 நபர்கள் சேதுவை வழிமறித்து நிறுத்தி, நாங்கள் போலீஸ் உனது பையை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, சேதுவின் பையை சோதனை செய்துள்ளனர்.

மேலும், சேதுவை மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.12,000-ஐ பறித்துக் கொண்டு, சேதுவை தாக்கி, காவல் நிலையத்தில் வந்து பணத்தை பெற்றுக் கொள் எனக் கூறி 2 நபர்கள் இருசக்கர வாகனத்திலும், 2 நபர்கள் ஓடியும் தப்பிச் சென்றனர். இது குறித்து சேது B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வடக்கு கடற்கரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்தும், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், மேற்படி வழக்கில் தொடர்புடைய கௌரி சங்கர் மகன் பார்த்தசாரதி (36), முகமது இக்பால் மகன் சையது இப்ராஹிம் (51), அபுஹனிபா மகன் ரம்ஜான் அலி (38) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் ரூ.7,500 மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (22.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE