5 போதைப்பொருள் வழக்குகளில் தலைமறைவு - சென்னையில் முக்கிய குற்றவாளி முதாசீர் கைது!

By KU BUREAU

சென்னை: சென்னை பெருநகர காவல் நிலையங்களில் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட 5 போதைப்பொருள் வழக்குகளில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், "சென்னை பெருநகர காவல், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி அன்று 5 கிராம் மெத்தபெட்டமைன் வைத்திருந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட வழக்கிலும், 2024ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அன்று 12 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 27 MDMA மாத்திரைகள் விற்பனை செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும், முக்கிய குற்றவாளி முதாசீர் என்பவர் தலைமறைவாக இருந்துள்ளார்.

மேலும், நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அன்று 25 MDMA மாத்திரைகள், வைத்திருந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும், 2024ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி அன்று 52 கிராம் மெத்தமபெட்டமைன் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும், 2024ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி அன்று எழும்பூர் காவல் நிலையத்தில் 705 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 6 கிலோ பச்சை கஞ்சா (Green Ganja) விற்பனை செய்த வழக்கிலும், முதாசீர் சம்பந்தப்பட்டிருப்பதும், 2022ம் ஆண்டு ஆயிரம் விளக்கு காவல் நிலைய நிலைய கஞ்சா மற்றும் ஆயுதம் வைத்திருந்த வழக்கில் 2024ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி அன்று நீதிமன்றம் இவர் மீது பிடியாணை (NBW) பிறப்பித்துள்ளதும் தெரியவந்தது.

மேற்படி எதிரி முதாசீரை பிடிக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) காவல் குழுவினர் மற்றும் B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, தீவிர விசாரணை செய்து, ஆந்திர பிரதேசம் மற்றும் சென்னை பகுதிகளில் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, ராஜாஜி சாலை, கடற்கரை ரயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த, மேற்படி 5 வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முதாசீர் (30) என்பவரை நேற்று (22.01.2025) கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி முதாசீர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நேற்று (22.01.2025 நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வடக்கு கடற்கரை, நந்தம்பாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு ஆகிய காவல் நிலையங்களில் போதைப்பொருள் வைத்திருந்தது தொடர்பான 5 வழக்குகளில் தலைமறைவாக இருந்த மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முக்கிய குற்றவாளியை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு மற்றும் B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய தனிப்படையினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE