சென்னை: யானைகவுனி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், "சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, யானைகவுனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் ஜனவரி 21ம் தேதி அன்று வால் டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு சிலர் பணம் வைத்து சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில் மேற்படி இடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஸ்கர், தினகரன், ஆனந்த கிருஷ்ணன், ஆறுமுகம், ஆதிபிரகாஷ் உட்பட 15 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 226 டோக்கன்கள் மற்றும் 10 சீட்டுக் கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சி-2 யானைகவுனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட 15 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
» சென்னையில் குழந்தையை கடத்திய வேலைக்கார பெண் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
» தெலங்கானா கொடூரம்: மனைவியை கொலை செய்து உடலை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன்!