சென்னை: 2019ம் ஆண்டு அமைந்தகரை பகுதியில் குழந்தையை கடத்திய வழக்கில் வேலைக்கார பெண் உட்பட 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ”சென்னை, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் 2019ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி அன்று அமைந்தகரை காவல் நிலையம் ஆஜராகி, மதியம் பள்ளி முடித்து பள்ளி வேனில் வீட்டிற்கு வந்த தனது மூன்றரை வயது குழந்தையை தனது வீட்டு வேலைக்கார பெண் அம்பிகா என்பவர் கடத்திச் சென்றதாகவும், பின்னர் செல்போனில் பேசிய ஒரு ஆண் நபர் தனது குழந்தையை கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் குழந்தையை உயிருடன் கொடுப்பதாகவும் கேட்டு மிரட்டியதாகவும் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அமைந்தகரை காவல் நிலைய தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, கடத்திச் செல்லப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டு, குழந்தையை கடத்திச் சென்ற செங்காந்தரம் அப்துல் வகாப் மகன் கலிமுல்லா சேட் (30) மற்றும் அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியை சேந்த் முத்துராஜ் மகள் அம்பிகா (24) ஆகிய இருவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இவ்வழக்கு, காவல்துறையினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு, அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு நேற்று (22.01.2025) வழங்கப்பட்டது.
» தெலங்கானா கொடூரம்: மனைவியை கொலை செய்து உடலை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன்!
» 17 வயது சிறுவனை கடத்திய பெண்: பெரியபாளையம் அருகே போக்சோவில் கைது
மேற்படி வழக்கில் கலிமுல்லா சேட் மற்றும் அம்பிகா ஆகிய இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி 2 குற்றவாளிகளுக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் ஆளிநர்களை, காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.