தெலங்கானா கொடூரம்: மனைவியை கொலை செய்து உடலை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன்!

By KU BUREAU

ஹைதராபாத்: தெலங்கானாவில் மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து அப்புறப்படுத்தியதாக கணவன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. 45 வயதான இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது ஹைதராபாத்தில் டிஆர்டிஓவில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி வேங்கட மாதவி (35) ஜனவரி 16 ஆம் தேதி காணாமல் போனார். அவர் காணாமல் போனது தொடர்பாக போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது அவர்களுக்கு கணவர் குருமூர்த்தி மீது சந்தேகம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் குருமூர்த்தியிடம் கடுமையாக விசாரித்துள்ளனர்.

திடுக் தகவல்: போலீஸ் விசாரணையில் குருமூர்த்தி சொன்ன தகவல் காவல்துறையினரேயே கலங்க வைத்துள்ளது. குருமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், நான் என் மனைவியை கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை வீட்டின் கழிவறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டினேன். உடலை குக்கரில் வேகவைத்தேன். பின்னர் அவற்றை மீராபேட் ஏரியில் வீசினேன் என்றார். அவர் கூறிய தகவலை உறுதி செய்ய போலீஸார் ஆதாரங்களைத் தேடி வருகின்றனர்.

குருமூர்த்தி - மாதவி தம்பதிக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். இத்தம்பதி அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று அக்கம்பக்கத்தினரும் உறுதி செய்த நிலையில், குருமூர்த்தி வாக்குமூலத்தின் படியே கொலை நடந்ததா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் குருமூர்த்தி சொன்ன கொலைத் தகவல்களே அதிர வைப்பதாக உள்ளதால், இந்தக் குற்றச் செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE