ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மின்சார ஸ்கூட்டர் எரிந்து நாசம்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில்நிலைய நுழைவுவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி குத்துக்கல் தெருவை சேர்ந்தவர் முகமது சித்திக். இவர் இன்று காலை ராமநாதபுரத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் (இருசக்கர மின்சார வாகனம்) ராமநாதபுரம் வந்தார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் படிக்கும் அவரது மகன் சென்னை விரைவு ரயிலில் ராமநாதபுரம் வருகை தந்தார்.

ரயிலில் வந்த மகனை அழைத்து வருவதற்காக ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு மின்சார ஸ்கூட்டரில் சென்ற முகமது சித்திக் வாகனத்தை நுழைவு வாயில் முன் நிறுத்திவிட்டு சென்றார். ரயில் நிலையத்துக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் ரயில் நிலையத்தின் வாசலில் சத்தம் கேட்டதை அடுத்து அவர் ஓடி வந்து பார்த்தார். அப்போது, அவரது மின்சார ஸ்கூட்டரில் இருந்து முதலில் கரும்புகை வெளி வந்த நிலையில், பின்னர் வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களை ஓட்டுநர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தினர். இருப்பினும் அந்த மின்சார இருசக்கர வாகனம் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து முகமது சித்திக் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து முகமது சித்திக் கூறுகையில்''எரிந்து நாசமான மின்சார ஸ்கூட்டரை இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். இதுவரை தீ விபத்து எதுவும் ஏற்பட்டதில்லை. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தபோது தீ பிடித்து எரிந்து நாசமாகிவிட்டது'' எனத் தெரிவித்தார்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE