விருதுநகர் அருகே வேனில் கடத்தப்பட்ட 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்: ஓட்டுநர் கைது

By KU BUREAU

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வேனில் கடத்திச் செல்லப்பட்ட 2 டன் ரேசன் அரிசியை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் வீரணன் தலைமையிலான திருச்சுழி போலீசார் திருச்சுழி - காரியாபட்டி சாலையில் பி.தொட்டியாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மதுரை நோக்கிச் சென்ற மினி வேன் ஒன்றை நிறுத்தி விசாரித்தனர். மினி வேன் ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீஸார் மினி வேனை சோதனையிட்டபோது அதில் ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சேரன் அரிசியை வாங்கி பதுக்கிவைத்திருந்து அதை மதுரைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. அதையடுத்து, மினி வேன் ஓட்டுநர் மதுரை சக்கிமங்களத்தைச் சேர்ந்த கபிலன் (21) என்பவரை திருச்சுழி போலீஸார் கைது செய்தனர்.

மேலும், வேனில் கடத்திச் செல்லப்பட்ட 2 டன் ரேசன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட ஓட்டுநர் கபிலனையும், பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியையும் விருதுநகர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE