மங்களூர் கூட்டுறவு வங்கியில் திருடிய வழக்கில் நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: கர்நாடக மாநிலம் மங்களூர் கூட்டுறவு சங்க வங்கியில் திருடியது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் ரொக்கம், 2 துப்பாக்கிகள் மற்றும் 3 தோட்டாக்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உல்லால் பகுதியில் கோட்டேகார் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த 17-ம் தேதி முகமூடி அணிந்து காரில் வந்த 5 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளை அடித்து கொண்டு தப்பி சென்றனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த இருந்த இந்த வழக்கில் காவல் துறையினரின் விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர், உத்தரபிரதேசத்தை சார்ந்த 2 பேர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குடியிருந்து வரும் தமிழகத்தை சேர்ந்த 3 பேர், மங்களூரை சேர்ந்த இருவருமாக மொத்தம் 9 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் அனைவருமே மும்பை சிறைச்சாலையில் பல்வேறு வழக்குகளில் அடைக்கப்பட்டிருந்தபோது நண்பர்களாக பழகி இந்த கொள்ளைக்கு திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மங்களூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் கேரளா வழியாக போலியான காரின் பதிவு எண் கொண்டு 2 கார்களில் தப்பிச் சென்றது தெரியவந்தது. ஒரு கார் மங்களூர் வழியாகவும் மற்றொரு கார் கேரளா நோக்கி சென்றதாகவும் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பத்மநேரியை சேர்ந்த முருகாண்டி, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மும்பையில் டோம்பிவாலி பகுதியில் குடியிருக்கும் ஜொசுவா ஆகியோரை மங்களூர் போலீஸார் அம்பாசமுத்திரம் பகுதியில் கைது செய்தனர்.

இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மும்பையில் வசித்து வந்ததாகவும் தற்பொழுது மங்களூரில் கொள்ளையடித்து விட்டு நகை மற்றும் பணத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிலோ தங்க நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம், 2 நாட்டு துப்பாக்கிகள், 3 தோட்டாக்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்ற குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்ற வழியாக அழைப்பு ஆணை பெற்று மங்களூர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE