வாடிக்கையாளர் போல நடித்து நகைக் கடையில் தங்க நெக்லஸ்கள் திருட்டு: சென்னையில் பெண் கைது

By KU BUREAU

சென்னை: யானைகவுனி பகுதியில் உள்ள தங்க நகை கடையில் தங்க நெக்லஸ்களை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 83.55 கிராம் எடையுள்ள 3 தங்க நெக்லஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை, யானைகவுனி, என்எஸ்சி போஸ் ரோட்டில் நரேஷ்குமார் மேத்தா (54) என்பவர் ஶ்ரீமஹாவீர் ஜீவல்லரி என்ற தங்கநகை கடை நடத்தி வருகிறார். இவர் ஜனவரி 17ம் தேதி அன்று இரவு கடை மூடுவதற்கு முன்பு தங்க நகைகளை சரிபார்த்த போது, சுமார் 240 கிராம் எடையுள்ள தங்க நெக்லஸ்கள் திருடு போயுள்ளது தெரியவந்தது.

இது குறித்து நரேஷ்குமார் மேத்தா யானைகவுனி காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். யானைகவுனி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் மேற்படி தங்க நெக்லஸ்களை திருடிய தண்டையார்பேட்டையை சேர்ந்த் பாஸ்கர் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (40) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மேற்படி தங்க நகைக் கடையின் வாடிக்கையாளர் என்பதும், இவர் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேத அன்று மேற்படி தங்க நகை கடைக்கு சென்று, தங்க நெக்லஸ்களை பார்த்துவிட்டு தங்க நெக்லஸ் செய்ய ஆர்டர் கொடுத்துவிட்டு, கடையில் இருந்த தங்க நெக்லஸை திருடிச் சென்றதும், பின்னர் 2025ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி அன்று ஆர்டர் கொடுத்த தங்க நெக்லஸை வாங்குவதற்கு தனது குழந்தையுடன் கடைக்கு சென்று, தங்க நெக்லஸை பார்த்து அதில் சில குறைபாடுகள் உள்ளதாக கூறி சரி செய்ய சொல்லி செல்லும்போது, மேலும் சில தங்க நெக்லஸ்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

மேலும், அவரிடமிருந்து சுமார் 83.55 கிராம் எடையுள்ள 3 தங்க நெக்லஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி விசாரணைக்குப் பின்னர் நேற்று (20.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE