மதுரை அருகே அமைச்சருக்கு சொந்தமான கார் மோதி காயமடைந்தவர் உயிரிழப்பு

By என்.சன்னாசி

மதுரை: மதுரை அருகே துணை முதல்வர் கான்வாயில் சென்ற அமைச்சர் கார் மோதி காயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ஜன.16ம் தேதி துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். சுமார் 3 மணி நேரம் மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டை ரசித்து பார்த்தார். இதன் பின் மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி மகனுடன் காரில் புறப்பட்டு சென்றார். இவரது காருக்கு பின்னால் திமுக நிர்வாகிகளின் கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.

திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் அய்யங்கோட்டை அருகே சென்றபோது, கான்வாயில் துணை முதல்வரின் காருக்கு பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அதே திசையில் டூவீலரில் சென்ற சித்தாலங்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் தலையில் பலத்த காயமும் வலது கால் முறிவும் ஏற்பட்டது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கென அனுமதித்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் உயிரிழந்தார்.
இது குறித்து வாடிப்பட்டி போலீசார் கார் ஒட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்தனர். விபத்து ஏற்படுத்திய கார் அமைச்சர் ஒருவருக்குரியது என, கூறப்படுகிறது. இது பற்றி காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் கேட்டபோது, ”விபத்து ஏற்படுத்திய கார் அமைச்சர் பி.மூர்த்திக்கு உரியது தான் என்றாலும், விபத்து ஏற்படுத்தியபோது, அவர் அதில் பயணிக்கவில்லை, ’ என்று அரவிந்த் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE