புதுச்சேரி: புதுச்சேரியில் நகரப்பகுதியில் வெடித்த மர்மபொருள் பட்டாசு மருந்தில் தயாரித்த வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதில் 3 சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியில் ஞாயிறு அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இச்சம்பவம் குறித்து பெரியகடை போலீஸார் வழக்குப்பதிந்து இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு வெடித்ததுபோல் காகிதங்கள் இருந்தன.
அப்பகுதியை சேர்ந்தோரிடம் விசாரித்த போது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது தெரிய வந்தது.அதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த ஹேமந்த (18) மற்றும் விஜயராகவன் (18) ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உதவியதாக 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி போலீஸார் கூறுகையில், "புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த லோகு பிரகாஷ், அப்பகுதியைச் சேர்ந்த ஸ்டிக்கர் மணி ஆகியோரிடையே ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், லோகு பிரகாஷின் சகோதரியை ஸ்டிக்கர் மணி கேலி செய்ததாக தெரிகிறது. அதையடுத்து அவரை தாக்கும் வகையில் லோகுபிரகாஷ் அவரது நண்பர்கள், பட்டாசு வெடி மருந்தில் வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.
» கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கு: சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு
» மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஊழியர் போக்சோவில் கைது
அதன்படி சனிக்கிழமை இரவிலிருந்து ஸ்டிக்கர் மணியை தேடி லோகுபிரகாஷ் கூட்டாளிகள் அலைந்த நிலையில் அவர் கிடைக்கவில்லை இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வாஞ்சிநாதன் வீதியில் பட்டாசு மருந்து வெடிகுண்டை வீசி சென்றதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவான லோகுபிரகாஷை தேடி வருகிறோம். கைது செய்யப்பட்ட விஜயராகவன் மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளது" என்றனர்.