ராமநாதபுரம்: கொலை மிரட்டல் விடுப்பவர் மீது நடவடிக்கை கோரி கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ஊராட்சியில் முறைகேடு புகார் தெரிவித்ததால், கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தம்பதியினர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திராஜன்(35). விவசாயியான இவர் இன்று (ஜன.20) ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது மனைவி இளவரசி மற்றும் 6 மாத கைக்குழந்தையுடன் வந்து திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த கியூ பிரிவு தலைமைக் காவலர் ராஜேந்திரன், தீப்பெட்டி பற்ற வைக்காமல் இருக்க திடீரென பாய்ந்து, அவரது கைகளை இறுக பிடித்து தடுத்தார். இதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.

அதன்பின் அங்கு பாதுகாப்பு புணியில் இருந்த நகர் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார், சக்திராஜன், அவரது மனைவி மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்கு கேணிக்கரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவியுடன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி சக்திராஜன்.

இது குறித்து சக்திராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சமூக ஆர்வலராகவும், விவசாயியாகவும் இருந்து வருகிறேன். எங்களது சூரங்கோட்டை ஊராட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அதனால் ஊராட்சி தலைவராக இருந்த தெய்வநாதன் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இருந்தபோதும் நான் ஊராட்சியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை அவரிடம் நேருக்கு நேராகவும் தட்டிக்கேட்டேன். அதனால் அவருக்கு என்மீது விரோதம் ஏற்பட்டது. அவர் என்னை ஆட்களை வைத்து அடிப்பதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் முதல் மாவட்ட ஆட்சியர், காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. விசாரணைக்கு சென்றால் முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல், காவல்துறையினர் என்னை மிரட்டுகின்றனர். இது ஜனநாயக நாடா அல்லது பணநாயக நாடா? ஒரு சமூக ஆர்வலருக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. அதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். இனியாவது, முறைகேடு செய்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து வரும் முன்னாள் ஊராட்சி தலைவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE