உசிலம்பட்டி அதிர்ச்சி: பட்டியலின சிறுவனை காலில் விழ வைத்து மிரட்டிய 6 பேர் மீது வழக்கு!

By KU BUREAU

உசிலம்பட்டி: பட்டியலின சிறுவனை காலில் விழ வைத்து கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீஸார் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

உசிலம்பட்டி அருகிலுள்ள சங்கம்பட்டி பார்வதி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் 17 வயது பட்டியலின சிறுவன் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த புரட்டாசி மாதம் நடந்த திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 16-ம் தேதி தங்களது ஊரைச் சேர்ந்த சிலர் ஆபாசமாக பேசி, ஜாதி பெயரை சொல்லி திட்டினர். பிறகு அங்கிருந்த 6 வயது சிறுவன் உட்பட எல்லோர் கால்களிலும் விழ வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக கிஷோர், உக்கிரபாண்டி, மணிமுத்து உட்பட 6 பேர் மீது போலீஸார் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இருப்பினும், சிறுவன் மீது சிறுநீர் கழித்து அராஜகம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘காலில் விழவைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக 6 பேர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சிறுவன் மீது சிறுநீர் கழித்ததாக தவறான தகவல் பகிரப்படுகிறது,இது உண்மைக்கு புறம்பானது’ என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE