ஜூஸில் விஷம் கலந்து காதலன் கொலை: காதலி கிரீஷ்மா குற்றவாளி என தீர்ப்பு; தாய் விடுதலை

By KU BUREAU

திருவனந்தபுரம்: கசாயத்தில் விஷம் கலந்து ஷாரோன் கொல்லப்பட்ட வழக்கில் கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கிகொடுத்த அவரின் தாய் மாமா நிர்மல் குமார் அகியோர் குற்றவாளிகள் என கூறியுள்ளது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்த இவர், ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார்.

2022ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி காதலியின் வீட்டுக்கு ஷாரோன் சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தவர் திடீரென வாந்தி எடுத்து, மயங்கிவிழுந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயராஜ், தனது மகன் ஷாரோனை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து அக்டோபர் 25-ம் தேதி அவர் உயிர் இழந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டபோது ஷாரோன், காதலி கிரீஸ்மாவிடம் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வைரல் ஆகி வருகிறது. அதில், "நீ கொடுத்த கசாயத்தைக் குடித்ததில் எனக்கு வாயில் புண் ஏற்பட்டுள்ளது. கல்லீரல், கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்" என்று கூறுகிறார். அப்போதும் காதலி கிரீஸ்மா கல் நெஞ்சத்தோடு தான் வழக்கமாகக் குடிக்கும் கசாயத்தைதான் உனக்கும் தந்தேன் என்கிறார்.

மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தபோது ஷாரோன்ராஜின் ரத்தமாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. அவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்திலும், காதலி கிரீஸ்மாவை விட்டுக் கொடுக்கவில்லை. அவர் தனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து போலீஸ் விசாரணையில் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார். நெடுமங்காடு போலீஸ் நிலையத்தில் அவர் விசாரணையில் இருந்தபோது அங்குள்ள கழிவறையில் இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஷாரோன்ராஜின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் சேர்ந்து கிரீஸ்மா வீட்டில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வீடு சேதமானது. கிரீஸ்மா கிருமிநாசினியை குடிக்கும்போது பணியில் இருந்தஇரு பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இவ்விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, ‘காதலி வீட்டில் மாம்பழச்சாறும், கசாயமும் ஷாரோன் குடித்துள்ளார். கசாயத்தில் களைக்கொல்லி மருந்தை கிரீஸ்மா கலந்திருக்கிறார். அவரது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார். இரண்டாவது தாரமே தங்கும் என சொன்னதால் கிரீஸ்மா இதை அரங்கேற்றியதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கான ஆவணங்களோ, சாட்சிகளோ இல்லை.

கிரீஸ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட் டுள்ளது. இது தெரிந்தால் ஒரு வருட காலமாக ஷாரோன்ராஜ் உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியில் கசியவிடக்கூடும் என்ற அச்சம் கிரீஸ்மாவுக்கு இருந்தது. இதுதான் கொலைக்கான ஒற்றைக் காரணம். ஷாரோன் ராஜ் உடனான காதலை முறிக்க கிரீஸ்மா முயன்றுள்ளார். அது வெற்றி பெறாத தால் அவரையே கொலை செய்து காதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் கிரீஸ்மா வின் தாய் சிந்து, அவரது மாமா நிர்மல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஷாரோன் ராஜை கொலை செய்ய பயன்படுத்திய விஷ பாட்டில் பறிமுதல்செய்யப்பட்டிருக்கிறது. கிரீஸ்மாவை தொடர்ந்து அவரது தாய் சிந்து, மாமா நிர்மலையும் கைது செய்துள்ளோம்’ இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. 95 சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கிகொடுத்த அவரது தாய்மாமா நிர்மல் குமார் அகியோர் குற்றவாளிகள் என கூறியுள்ளது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE