காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த விழுதவாடி கிராமத்தில் உள்ள ஏரி தாங்கலில் மூன்று இளைஞர்களின் சடலங்களை மீட்ட போலீஸார், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த படூர் ஊராட்சிக்குட்பட்ட விழுதவாடி கிராமத்தில் ஏரி தாங்கல் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட ஏரி தாங்கலில் மூன்று இளைஞர்களின் சடலம் மிதப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுதொடர்பாக, தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மேலும், தீயணைப்பு மீட்பு படை வீரர்களுக்கு வரவழைத்து ஏரி தாங்கலில் முகம் அழுகிய நிலையில் மிதந்த இளைஞர்களின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும், உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட மூவரும் பாலேஸ்வரர் கிராமத்தைச் சேர்ந்த சத்ரியன், பரத் மற்றும் விஷ்வா என தெரிந்தது. மேலும், மூவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான், மேற்கண்ட மூவரும் சடலமாக ஏரி தாங்களில் போலீஸார் மீட்டுள்ளனர்.
மேலும், மூவரின் உடல்களில் வெட்டு காயங்கள் உள்ளதால், கொலை செய்யப்பட்ட ஏரியில் வீசப்பட்டனரா எனவும் மற்றும் இப்பகுதிக்கு வரவேண்டிய காரணம் என்ன. வேறு யார் இப்பகுதிக்கு வந்தனர் போன்ற பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மாட்டுப்பொங்கல் தினத்தில், ஏரி தாங்கலில் மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.