தூத்துக்குடி: தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக நேற்றிரவு கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் கியூ பிரிவு போலீஸார் தூத்துக்குடி கடற்கரையோரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இனிகோ நகர் கடற்கரை பகுதியில் நின்ற வேனை சோதனையிட்டனர்.
அப்போது வேனில் யாரும் இல்லை. மேலும், வேனில் 40 மூட்டைகள் இருந்தன. அதனை சோதனையிட்ட போது, அதில் சுமார் 1200 கிலோ பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இனிகோ நகர் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற மர்மநபர்கள், போலீஸார் ரோந்து வருவதை கவனித்ததும், அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,200 கிலோ பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவற்றை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து, வேனின் உரிமையாளர், பீடி இலைகள் யார் கடத்த முயன்றது உள்ளிட்டவைகள் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - வெளியானது விரிவான விளக்கம்!
» ராயபுரம் ஜுஸ் கடையின் கல்லாவிலிருந்து பணத்து எடுத்து ரகளை: இளைஞர் கைது