மானாமதுரை அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு ‘சீல்’

By இ.ஜெகநாதன்

மானாமதுரை: மானாமதுரை அருகே சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் பல லட்சம் ரூபாயிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வாடிவில்லிபுத்திரியேந்தல் பகுதியில் முத்துக்குமார் என்பவரது தோட்டத்தில் கோழி பண்ணை இயங்கி வந்தது. அதில் கடந்த 10 தினங்களாக சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்குவதாக செந்தட்டியேந்தல் கிராம நிர்வாக அலுவலர் ராஜாவுக்கு புகார் வந்தது.

அவரது தகவலின் பேரில் டிஎஸ்பி நிரேஷ், வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆலையில் புஸ்வானம், ராக்கெட், மத்தாப்பூ, சங்குசக்கரம், வாணவேடிக்கை வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

ஆனால் அதிகாரிகளை கண்டதும் பட்டாசுகளை தயாரித்தோர் தப்பியோடினர். இதையடுத்து பல லட்சம் ரூபாயிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலைக்கு ‘சீல்’ வைத்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறையினர், போலீஸார் கூறியதாவது: மொத்தம் 1.10 ஏக்கரில் ஆலை இயங்கி வந்தது. அங்கிருந்த ரூ.7 லட்சம் மதிப்பாலான பட்டாசுகள், வெடி மருந்துகளை பறிமுதல் செய்தோம். விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி பட்டாசு ஆலைகள் விபத்துக்கு உள்ளாவதால், அதிகாரிகள் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

இதனால் விருதுநகர் மாவட்ட எல்லையான சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தற்காலிக ஆலையை ஏற்படுத்தி தயாரித்து வந்துள்ளனர். நில உரிமையாளர், பட்டாசு தயாரித்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE