புதுச்சேரி: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வெள்ளபாக்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து (32). செண்டரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 7 மாத கைக் குழந்தை ஒன்று உள்ளது.
கடந்த 8ம் தேதி முத்து தனது நண்பர்கள் சிலருடன் புதுச்சேரி அடுத்த பாகூர் சித்தேரி அணைக்கட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுக் கடையில் மது குடித்துள்ளார். அவர்களுக்கு அருகே இரண்டாயிர விளாகம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த ராஜ், குருவி நத்தத்தைச் சேர்ந்த ரஞ்சித், ராஜேஷ் ஆகியோரும் மது குடித்துள்ளனர். அப்போது முத்து தரப்புக்கும், ஆனந்த ராஜ் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளுனர்.
ஒரு கட்டத்தில் நண்பர்கள் தப்பியோடிய நிலையில் தனியாக சிக்கிக்கொண்ட முத்துவை ஆனந்தராஜ் தரப்பினர் கற்கள் மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்து ரத்த வெள்ளத்தல் சரிந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் முத்துவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட முத்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். மேலும், இது குறித்து முத்துவின் மனைவி அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து இரண்டாயிர விளாகம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், குருவிநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர்.
» சென்னை | இளம்பெண் தற்கொலை வழக்கில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் கைது
» கோவை அருகே யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேர் கும்பல் கைது
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த முத்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனிடையே கொலை சம்பவம் நடந்த மதுக்கடையின் முன்பு இறந்த முத்துவின் உறவினர்கள் மற்றும் வெள்ளப்பாகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையின் முன்பு அமர்ந்து மறியல் செய்தனர்.
மறியலில், சாதி அடிப்படையில் முத்துவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். எனவே வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கை மாற்ற வேண்டும். எல்லையில் மது குடிக்க வரும் தமிழக இளைஞர்களை தொடர்ந்து தாக்கி கொலையும் செய்து வருகின்றனர். புதுச்சேரி எல்லைக்கு மது குடிக்க வரும் தமிழக இளைஞர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாகூர் வட்டாட்சியர் கோபால கிருஷ்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு முத்துவின் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.