பொன்னேரி: சென்னை-மணலிபுதுநகர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளிவாயல் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சதா. அதிமுகவை சேர்ந்த இவரின் மகன் விக்கி என்கிற ராயப்பன்(29). மணலிபுதுநகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மணலிபுதுநகர் அருகே உள்ள வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதல் திருமணம் செய்த ராயப்பன், மாமனார் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ராயப்பன் முறையாக பணிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகலில் வீட்டில் இருந்து வெளியே சென்ற ராயப்பன் நேற்று இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இச்சூழலில், இன்று மணலிபுதுநகர் அருகே உள்ள நாப்பாளையம் பகுதியில் உள்ள முட்புதரில், கும்பலால் ராயப்பன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தகவலறிந்த மணலி புதுநகர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, ராயப்பனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸாரின் விசாரணையில், ’’ராயப்பன் பழைய நாப்பாளையம் பகுதியை சேர்ந்த தன் நண்பர்களான அகிலன்(25), பிரசாந்த்(25), ரவீந்திரகுமார்(48) ஆகிய 3 பேருடன் இரவு மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது, அகிலனின் சகோதரி பற்றி ராயப்பன் தவறாக பேசியது தொடர்பாக ஏற்பட்ட வீண் தகராறில் அகிலன் உள்ளிட்டோர் சேர்ந்து கட்டையால் ராயப்பனை தாக்கி கொலை செய்தது’’ தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, அகிலன், பிரசாந்த், ரவீந்திரகுமார் ஆகிய 3 பேரை இன்று மாலை போலீஸார் கைது செய்தனர்.