கரூரில் மணல் கடத்தல்: லாரியை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கட்சி நிர்வாகி!

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: மணல் கடத்திய லாரியை மடக்கிப் பிடித்து சாமான்ய மக்கள் கட்சியின் நிர்வாகி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.

கரூர் சணப்பிரட்டி பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சவுடு மண், மணல் கடத்தப்பட்டு வருவதாகவும் இதனைக் கண்டித்து சணப்பிரட்டி ரயில் நிலையம் அருகே மணல் கடத்தி வரும் லாரிகளை இன்று (ஜன.8ம் தேதி) மடக்கிப் பிடிக்கும் போராட்டம் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ப.குணசேகரன் இன்று (ஜன.8ம் தேதி) அவ்வழியே வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி லாரியை பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் கரூர் கோட்டாட்சியர் மற்றும் கனிமவளத்துறைக்கு தகவல் அளித்ததுடன் காவல் நிலையத்திலும் புகாரும் அளித்தார். இதுகுறித்து புகாரின்பேரில் பசுபதிபாளையம போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சாமானிய மக்கள் நலக்கட்சி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ப.குணசேகரன் தெரிவித்தது: ''குளித்தலை பகுதியில் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுக் கொண்டு அதை வைத்து சணப்பிரட்டி தனியார் பட்டா நிலத்தில் மணல் எடுத்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் சவ்வூடு மண் எடுப்பதற்கும் தடை இருக்கும் நிலையில், இந்த அனுமதியே போலியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மணல் எடுக்க நிலம் வழங்கிய தனியார் நில உரிமையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE