அம்பத்தூர் விநாயகர் கோயிலில் 5 வெண்கலச் சிலைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

By இரா.நாகராஜன்

ஆவடி: அம்பத்தூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் நள்ளிரவில் கதவை உடைத்து, 5 வெண்கலச் சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை- அம்பத்தூர், கிருஷ்ணாபுரம், தாகூர் தெருவில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவினை தீர்த்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வழக்கம்போல் நேற்று இரவு பூஜை முடிந்து, அர்ச்சகர் சுப்பிரமணி கோயில் கதவுகளை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், இன்று காலை கோயிலின் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.

இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கோயில் நிர்வாகி திருநீலகண்டன், கோயிலுக்கு விரைந்து சோதனை செய்தார். அச்சோதனையில், கோயிலில் இருந்த விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, நடராஜர் ஆகிய 5 வெண்கலச் சிலைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, திருநீலகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, கோயில் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, சிலைகளை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE