சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் மீது ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி ரவீந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவருக்கு எதிராக வழக்குத்தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் நிலுவையில் இருந்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
» பழநி கோயிலில் வேலை வாங்கித் தருவதாக ரூ.32 லட்சம் மோசடி - எஸ்பியிடம் இருவர் புகார்
» சிவகங்கையுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிகளை இணைக்க மக்கள் எதிர்ப்பு
அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி பி. வேல்முருகன், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் அந்த உத்தரவை ரத்து செய்கிறேன். தமிழக போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அமல்படுத்த நேரமில்லாத காரணத்தால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுகிறேன். எனவே விருதுநகர் மாவட்ட போலீஸார் வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.