பழநி கோயிலில் வேலை வாங்கித் தருவதாக ரூ.32 லட்சம் மோசடி - எஸ்பியிடம் இருவர் புகார்

By கி.பார்த்திபன்

நாமக்கல்: பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.32 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் இருவர் புகார் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக நாமக்கல் பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த என்.கவின்குமார், எருமப்பட்டியைச் சேர்ந்த ரெங்காஸ்ரீ ஆகிய இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் இருவரும் அரசுப் பணிக்காக முயற்சி மேற்கொண்டு வந்தோம். அப்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி பழனி பாலதண்டாயுதபானி கோவிலில் உதவியாளர் மற்றும் கணினி உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறினார்.

இதற்காக இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு ரூ.32 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பணத்தை அப்பெண் மற்றும் அவர் கூறிய நபர்களின் வங்கிக் கணக்குகளில் பல்வேறு தவணைகளில் செலுத்தினோம். தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் வெவ்வேறு நாட்களில் எங்கள் இருவரையும் பழனி முருகன் கோயிலுக்கு பெண் உள்ளிட்டோர் வரவழைத்தனர்.

அங்கு எங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும், அலுவலகத்துக்குள் அழைத்து சென்று அங்குள்ள ஒருவரிடம் பணி நியமன ஆணையை வழங்கி, பணி பொறுப்பேற்க வைத்தனர். மேலும், பணியின் பெயர் குறிப்பிட்டு தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையும் இருவருக்கும் வழங்கப்பட்டது.

அதன்பின் எங்களை வீட்டுக்கு செல்லும்படியும், கோயிலில் இருந்து அழைப்பு வந்தபின் மீண்டும் பணியில் வந்து சேர்ந்து கொள்ளும்படியும் தெரிவித்தனர். அதன்பேரில் இருவரும் எங்களது இல்லத்திற்கு வந்துவிட்டோம்.

அதன்பின் நீண்ட நாட்களாகியும் எங்களை கோயிலில் இருந்து அழைக்கவில்லை. பணி ஆணை வழங்கிய பெண் உள்ளிட்டோரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதுதொடர்பாக விசாரித்தபோது எங்களுக்கு வழங்கிய பணி ஆணை மற்றும் அடையாள அட்டையும் போலி எனத் தெரியவந்தது.

பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் உள்ள காலிப் பணியிடம் தொடர்பாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அந்தப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வின்றி நேர்காணல் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனால் பெண் உள்ளிட்டோர் கூறியதை உண்மையென நம்பி பணத்தை வழங்கினோம். ஆனால், போலி பணி நியமன உத்தரவை வழங்கி எங்களை ஏமாற்றிவிட்டனர். எனவே சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன் எங்களது பணத்தையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE