ரூ.3000 லஞ்சம்: தூத்துக்குடி தொழிலாளர் துறை உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை!

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தராசு முத்திரையிட உரிமம் வழங்குவதற்காக ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேல ரதவீதி பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (66). இவர், தராசு முத்திரையிடுதல் மற்றும் பழுதுநீக்குதல் பணிகளுக்கு தொழிலாளர் துறை உரிமம் பெறுவதற்காக கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி அன்று விண்ணப்பித்துள்ளார். இவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அப்போதைய திருச்செந்தூர் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் காளிராஜ் (67) என்பவர், உரிமம் வழங்க ரூ.3000 லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார்.

இதற்கு சம்மதித்த முத்துராமலிங்கம், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் 2013ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி அன்று முத்துராமலிங்கத்திடம் இருந்து ரூ.3,000 பணத்தை லஞ்சமாக காளிராஜ் வாங்கிய போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வஷித்குமார், குற்றம்சாட்டப்பட்ட காளிராஜுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து இன்று (ஜன.6) தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில் அரசு வழக்கறிஞர் ஜென்ஸி ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE